Oppo Reno 15 ஓப்போ ரெனோ 15 சீரிஸ் நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது. இதன் விலை ரூ.45,999 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்போ நிறுவனம் தனது புதிய 'ரெனோ 15' (Reno 15), 'ரெனோ 15 ப்ரோ' (Reno 15 Pro) மற்றும் புதிதாக 'ரெனோ 15 ப்ரோ மினி' (Reno 15 Pro Mini) ஆகிய ஸ்மார்ட்போன்களை நாளை (ஜனவரி 8) இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ரெனோ 14 சீரிஸ் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில், மிக விரைவாக அடுத்த அப்டேட்டை ஓப்போ களமிறக்குகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இந்த போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
லீக் ஆன விலை விவரங்கள்
AnLeaks வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓப்போ ரெனோ 15 சீரிஸின் விலை ரூ. 45,999-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
• ஓப்போ ரெனோ 15: 8GB + 256GB மாடல் ரூ. 45,999, 12GB + 256GB மாடல் ரூ. 48,999 மற்றும் 12GB + 512GB மாடல் ரூ. 53,999-க்கு விற்பனைக்கு வரலாம்.
• ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி: இதன் விலை ரூ. 59,999 (12GB + 256GB) மற்றும் ரூ. 64,999 (12GB + 512GB) ஆக இருக்கலாம்.
• ஓப்போ ரெனோ 15 ப்ரோ: டாப் எண்ட் மாடலான இது ரூ. 67,999 முதல் ரூ. 72,999 வரை நிர்ணயிக்கப்படலாம்.
டிஸ்பிளே மற்றும் செயல்திறன்
டிஸ்பிளேவை பொறுத்தவரை, சிறிய அளவில் கையடக்கமாக எதிர்பார்க்கப்படும் 'ப்ரோ மினி' மாடல் 6.3 இன்ச் OLED திரையைக் கொண்டிருக்கும். அதேசமயம், ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்கள் பெரிய 6.9 இன்ச் OLED திரையுடன் வரும். அனைத்து மாடல்களும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) வசதியைக் கொண்டிருக்கும். ப்ரோ மற்றும் ப்ரோ மினி மாடல்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 (MediaTek Dimensity 8450) சிப்செட்டும், ஸ்டாண்டர்ட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட்டும் இடம்பெற வாய்ப்புள்ளது.
மிரள வைக்கும் 200MP கேமரா
புகைப்பட பிரியர்களைக் கவரும் வகையில், இந்தத் தொடரின் மூன்று மாடல்களிலுமே OIS ஆதரவுடன் கூடிய பிரம்மாண்டமான 200MP மெயின் கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ மினி மாடல்களில் கூடுதலாக 50MP டெலிபோட்டோ லென்ஸ் இருக்கும். ஸ்டாண்டர்ட் மாடலில் அதற்குப் பதிலாக 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கலாம். செல்ஃபி எடுக்க மூன்று மாடல்களிலுமே 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் சாஃப்ட்வேர்
சிறிய மாடலான 'ப்ரோ மினி' 6,200mAh பேட்டரியுடனும், மற்ற இரண்டு மாடல்களும் மிகப்பெரிய 6,500mAh பேட்டரியுடனும் வரவுள்ளன. இவை அனைத்தும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். மென்பொருளைப் பொறுத்தவரை, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான ColorOS 16-ல் இந்த போன்கள் இயங்கும்.


