க்ரிப்டிக் ட்விட்கள்... சொந்த ஸ்டைலில் டீசர் - விரைவில் நத்திங் போன் வெளியீடு!
நத்திங் நிறுவனத்தின் முதல் போன் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
நத்திங் போன் வெளியீட்டை அதன் நிறுவனர் கார்ல் பெய் ட்விட்களில் தெரிவித்து இருக்கிறார். க்ரிப்டிக் ட்விட்கள் வடிவில் நத்திங் நிறுவனத்தின் முதல் போன் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியானது. டீசருக்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஸ்னாப்டிராகன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்கள் பதில் அளித்துள்ளன.
கடந்த ஆண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் மூலம் நத்திங் தனது பயணத்தை தொடங்கியது. பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் கார்ல் பெய், நத்திங் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நத்திங் போன் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கார்ல் பெய் க்ரிப்டிக் ட்விட்கள் மூலம் ஆண்ட்ராய்டு தளத்தில் மீண்டும் பயணிக்க இருப்பதாக தெரிவித்தார். பின் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.-ஐ புகழந்து, ஆண்ட்ராய்டு மூத்த துணை தலைவரை டேக் செய்து ட்விட் பதிவிட்டார். மற்றொரு ட்விட்டில் பயனர் வெளியிட்ட நத்திங் போன் கான்செப்ட் ஸ்கெட்ச்-ஐ பகிர்ந்து இருந்தார். இவரது ட்விட்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஸ்னாப்டிராகன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்களில் இருந்து பதில் கிடைத்தது.
இவை அனைத்தும் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நத்திங் நிறுவனம் பவர் பேங்க் ஒன்றையும் உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் கார்ல் பெய் ஒன்பிளஸ் நிறுவனத்தில் இருந்து விலகி நத்திங் நிறுவனத்தை துவங்கும் பணிகளில் ஈடுபட்டார். பின் நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் நத்திங் நிறுவனத்தின் முதல் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், கிராஸ்-பிளாட்ஃபார்ம் சப்போர்ட், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் விற்பனை துவங்கிய நிலையில், இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக இயர் 1 இயர்பட்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இயர்பட்ஸ் விற்பனை மட்டுமின்றி நத்திங் நிறுவனம் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. மேலும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான எசென்ஷியல் நிறுவனத்தை கைப்பற்றியது. மேலும் முன்னாள் சாம்சங் நிறுவன நிர்வாக அதிகார மனு ஷர்மா நத்திங் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்.