விநாடிக்கு 40 ஜிபி இணையதள வேகம் : நோக்கியாவின் புதிய முயற்சி!
விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் டவுன்லோட் மற்றும் அப்லோடு செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கான முதற்கட்ட சோதனை தோஹாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் என்று அகாமய் நெட்வொர்க்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கத்தாரைச் சேர்ந்த ஒரேடோ நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்புகளின் வேகத்தை அதிகரிப்பது குறித்த ஆய்வில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தோஹாவில் நடந்த முதற்கட்ட சோதனையில் 40 ஜிபிபிஎஸ் என்ற வேகத்தில் டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யும் முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிடபிள்யூடிஎம் – பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் இந்த மைல் கல்லை நோக்கியா நிறுவனம் எட்டியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் நான்குவிதமான ஒயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஒயர்கள் ஒவ்வொன்றும் 10 ஜிபிபிஎஸ் (GBPS) வேகத்துக்கு கியாரண்டி அளிக்கக் கூடியது.