வேகமான ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் புதிய இணையதளம், ‘ஆப்ஸ்’
பயணிகள் விரைவாகவும், எளிதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நவீனமாக்கப்பட்ட இணையதளத்தையும், ஆன்ட்ராய்ட் தளத்தில் இயங்கக்கூடிய வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. மொபைல் செயலியையும்(ஆப்ஸ்) ரெயில்வே துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய இணையதளம் பயணிகள் எளிதாக கையாளும் விதத்திலும், ‘லாக்இன்’ , ‘லாக் அவுட்’ செய்வதும், நாம் செல்லும் இடங்களை தேர்வு செய்வது உள்ளிட்டவையும், டிக்கெட் முன்பதிவு செய்வது ஆகியவை எளிமையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரெயில்வேயில் அதிகமான பயணிகளை பயணிக்க வேண்டும், வருவாயை பெருக்கும் நோக்கில், புதிய நவீன இணையதளத்தையும், மொபைல் ஆப்ஸ்களையும் ரெயில்வே துறை அறிமுகம் செய்ய தீவிரமாக இருக்கிறது.
இந்த புதிய இணையதளம், ஆப்ஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் டிக்கெட் காத்திருப்பில் உள்ளதா, உறுதி செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்த தகவலையும் அளிக்கும். மேலும், நாம் பயணிக்கும் தேதி வந்தவுடன் அது குறித்து நினைவு படுத்துதல், நாம் பயணம் குறித்த திட்டம் வகுத்தல், தட்கால் மூலம் டிக்ெகட் முன்பதிவை தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து தடுத்தல் போன்றவையும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆப்ஸ், இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தபின், ரெயில் வருகை, புறப்பாடு எந்த இடங்களில் நிற்கும் ஆகியவை குறித்து பயணிக்கு அவர்கள் டிக்கெட்டில் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும், ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டாலும் அது தொடர்பாக அறிவிப்பையும், மீண்டும் ரெயில் எப்போது வரும், புறப்படும், தாமதத்துக்கான காரணம் ஆகியவை குறித்து எஸ்.எம்.எஸ். வாயிலாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். மேலும், ஒருரெயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரெயில் நிலையத்துக்கு செல்ல எத்தனை நிமிடங்கள் ஆகும், இறுதியான இடத்தை எப்போது அடையும் என்பது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன், ரெயில் தற்போது எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது, என்பதை சரியாக தெரிவிக்கும் முறையும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் அந்த ஆப்ஸ் மூலம் எந்த பயணியும் ரெயில்தற்போது எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறிய முடியும்.