மீண்டும் மீண்டுமா? அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கார்களை ரி-கால் செய்யும் மெர்சிடிஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்து வரும் EQS எலெக்ட்ரிக் காரை ரி-கால் செய்வதாக அறிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQS எலெக்ட்ரிக் கார் மாடலை அமெரிக்க சந்தையில் ரி-கால் செய்கிறது. பென்ஸ் EQS எலெக்ட்ரிக் மாடலின் எலெக்ட்ரிக் கனெக்ஷனில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கோளாறு சரி செய்யப்படவில்லை எனில் கார் தீப்பிடித்து எரியும் அபாயம் அதிகம் ஆகும். எனினும், இதுவரை இந்த கோளாறில் எந்த யூனிட்டும் பாதிக்கப்படவில்லை.
இரண்டாவது முறையாக மெர்சிடிசிஸ் பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை ரி-கால் செய்கிறது. காரின் இடதுபுற ஹெட்லேம்ப் இணைப்பின் கீழ் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது காரின் ஹெட்லேம்ப் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் காரை சூரிய மறைவுக்கு பின் இயக்க முடியாது. இதுதவிர இந்த பிரச்சினை காரில் தீப்பிடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவே மெர்சிடிஸ் பென்ஸ் ரி-கால் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ரி-கால் நோட்டீஸ் தற்போது 24 யூனிட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 3 EQS 450S, 16 EQS 450S+, 4 EQS 580s மற்றும் ஒரு 53 AMG மாடல் அடங்கும். சீரற்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் தீ விபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும் ஹெட்லேம்ப்கள் செயலற்று போகும் போது கார் விபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட யூனிட்களை மெர்சிடிஸ் பென்ஸ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்து வழங்குகிறது. இந்த பிரச்சினை மே 26 முதல் டிசம்பர் 23 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களில் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து ஆலையில் நடைபெறும் உற்பத்தியில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை அடுத்தக்கட்ட யூனிட்களில் இதே பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.