iPhone Fold ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (iPhone Fold) 2026 செப்டம்பரில் 2,000- 2,500 டாலர் விலையில் வெளியாகலாம் என லீக் தகவல். 7.8 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh+ பேட்டரி, 24MP UDC கேமரா என அசத்தும் அம்சங்கள்! முழு விவரம் உள்ளே.
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், புதிய கசிவுகள் அதன் வெளியீட்டுத் தேதி மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தெளிவான பார்வையை வழங்கியுள்ளன. ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் போல அவசரப்படாமல், தங்கள் முதல் முயற்சியே மிகவும் துல்லியமான மற்றும் முதிர்ச்சியடைந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று ஆப்பிள் விரும்புவதாகத் தெரிகிறது. இந்த 'ஐபோன் ஃபோல்ட்' (iPhone Fold) ஆனது, iPhone 18 Pro சீரிஸுடன் செப்டம்பர் 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் பரிசோதனை முயற்சி அல்ல, மடிக்கக்கூடய ஸ்மார்ட்போன் பிரிவில் ஆப்பிள் பெரிய அளவில் பந்தயம் கட்டுவதாகத் தெரிகிறது.
புரட்சிகரமான 24MP அண்டர்-டிஸ்ப்ளே கேமரா!
கேமரா பிரிவில் ஆப்பிள் ஒரு புதிய புரட்சியை நிகழ்த்த உள்ளது. ஜேபி மோர்கன் ஈக்விட்டி ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்த ஐபோன் ஃபோல்டில் உட்புற ஸ்கிரீனுக்காக 24 மெகாபிக்சல் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா (UDC) இடம்பெறலாம். தற்போதுள்ள ஆண்ட்ராய்டு ஃபோல்டபிள்கள் 4MP அல்லது 8MP UDC-களைப் பயன்படுத்தும் நிலையில், இது ஒரு மிகப்பெரிய மேம்படுத்தலாகும். இதன் மூலம், மறைக்கப்பட்ட கேமராக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த குறைந்த ஒளி கடத்துதல் மற்றும் தெளிவின்மை போன்ற சிக்கல்களை ஆப்பிள் வெற்றிகரமாக முறியடித்திருக்கலாம். எனவே, உயர்தரமான அண்டர்-டிஸ்ப்ளே கேமராவுடன் வெளிவரும் முதல் மடிக்கக்கூடிய போனாக இது இருக்கும். 🔋 ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி திறன்! பேட்டரி திறன் பற்றிய கசிவுகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo) ஆப்பிள் அதிக அடர்த்தி கொண்ட பேட்டரி செல்களைப் பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். கொரிய ஆதாரங்கள் இதன் திறன் 5,400 mAh முதல் 5,800 mAh வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளன. சீன லீக்கர் ஒருவர், இந்த பேட்டரி திறன் “நிச்சயமாக” 5,000 mAh-ஐ தாண்டும் என்று கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால், இதுவரையிலான ஐபோன்களில் பொருத்தப்பட்டதில் இதுவே மிகப்பெரிய பேட்டரியாக இருக்கும். 7.8 இன்ச் பெரிய டிஸ்ப்ளேக்கு இந்த அதிக திறன் கொண்ட பேட்டரி அவசியமாகிறது.
டச் ஐடி உடன் 7.8 இன்ச் பிரம்மாண்ட டிஸ்ப்ளே
ஐபோன் ஃபோல்டில் 7.8 இன்ச் பிரதான மடிக்கக்கூடிய திரை மற்றும் 5.5 இன்ச் வெளிப்புற கவர் டிஸ்ப்ளே இடம்பெறலாம் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஃபேஸ் ஐடி-யை மட்டும் சார்ந்திராமல், ஆப்பிள் டச் ஐடி அமைப்பை மீண்டும் கொண்டு வரலாம் என்று வதந்திகள் கூறுகின்றன. மெலிதான கவர் டிஸ்ப்ளே வடிவமைப்பிற்காக இந்த மாற்றம் இருக்கலாம். கேமரா அமைப்பைப் பொறுத்தவரை: வெளிப்புற ஸ்கிரீனில் ஒரு 'ஹோல்-பஞ்ச்' செல்ஃபி கேமரா. உட்புறத்தில் ஒரு ஹை-ரெசல்யூஷன் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா. பின்புறத்தில் டூயல் 48MP கேமரா அமைப்பு. என மொத்தம் நான்கு கேமரா மாடல்கள் இதில் இடம்பெறலாம்.
அல்ட்ரா-பிரீமியம் விலை எதிர்பார்ப்பு!
MacRumors அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் இதன் விலை $2,000 முதல் $2,500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஐபோன் ஃபோல்ட் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்களிலேயே மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கும். இந்த விலை நிர்ணயம், ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய போனை, பொதுப் பயனர்களை விட அல்ட்ரா-பிரீமியம் பிரிவின் மேல் கவனம் செலுத்தி அறிமுகப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு நேர்த்தியான மடிப்பு நுட்பம், உயர்நிலை UDC தொழில்நுட்பம், மிகப்பெரிய பேட்டரி மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றை ஆப்பிள் வழங்கினால், செப்டம்பர் 2026-ல் இது உலகை ஆளலாம்.


