நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருக்கு! லேண்டரின் RAMBHA-LP கருவி சொல்லும் ஆச்சரிய தகவல்!
நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாக சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் உள்ள ரம்பாலா - எல்பி (RAMBHA-LP) கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்தது. அதன் பின் ஆகஸ்ட் 25ஆம் தேதி விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவைத் தொட்டது. அதிலிருந்து நிலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து இஸ்ரோ தகவல் தெரிவித்து வருகிறது.
வியாழக்கிழமை இஸ்ரோ அளித்துள்ள புதிய தகவலின்படி, விக்ரம் லேண்டரில் உள்ள RAMBHA-LP என்ற ஆய்வுக் கருவி பதிவுசெய்த முதல் கட்ட தரவுகள் மூலம் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிலவில் மேற்பரப்பில் உள்ள பிளாஸ்மா ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் எலக்ட்ரான்கள் வரை அடர்த்தியாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பகல் பொழுதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள பிளாஸ்மா சூழலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய இந்த தரவுகள் பயன்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும், சூரியனால் விண்வெளி வானிலையில் ஏற்படும் ஏற்க இறக்கங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவுவதாக இருக்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. RAMBHA-LP கருவி மூலம் பெற்ற தரவுகளைக் கொண்டு உருவாக்கிய வரைபடம் ஒன்றையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
ஆதித்யா எல்1 முக்கிய ஆய்வுக் கருவியை வடிவமைத்தது யார்? இதுதான் ரொம்ப முக்கியம்? இஸ்ரோ விளக்கம்
இந்த RAMBHA-LP ஆய்வுக் கருவியை கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL/VSSC) தயாரித்துள்ளது என்றும் இஸ்ரோ ட்விட்டரில் கூறியுள்ளது.
முன்னதாக, விக்ரம் லேண்டரில் உள்ள ILSA கருவி நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் நிலவின் நில அதிர்வு நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கான ILSA கருவி உள்ளது. மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கருவியை இஸ்ரோ முதல் முறையாக நிலவில் ஆய்வுக்கு பயன்படுத்துகிறது.
இந்தக் கருவியில் நிலவில் ரோவர் மற்றும் பிற கருவிகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ILSA ஆறு உயர் உணர்திறன் கொண்ட அக்ஸிலேட்டர்களைக் கொண்டிருக்கிறது. இவை சிலிக்கான் மைக்ரோமச்சினிங் (Silicon Micromachining) செயல்முறையைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.
நிலவில் சல்பர் இருக்கா? விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பை APXS ஆய்வு மூலம் உறுதி செய்த பிரக்யான் ரோவர்!