கூகுள் மீது நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு! சிசிஐ அபராதத்துக்குப் பின் அடுத்த அடி!
ஸ்டார்ட்அப்கள், டெவலப்பர்கள் கூகுள் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சொல்கிறார்.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், டெவலப்பர்கள் இன்-ஆப் பேமெண்ட் முறையைப் பின்பற்றும்படி வற்புறுத்தியதற்காகவும் கூகுள் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோராயமாக ரூ.2,280 கோடி அபராதம் விதித்தது. இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில், கூகுள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், பிரச்சினை மிகவும் தீவிரமானது என்றும் மத்திய அரசாங்கத்திற்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது எனவும் சொல்கிறார்.
"அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அதைப் பற்றி யோசித்துள்ளோம். வரும் வாரங்களில் நீங்கள் அதைக் காண்பீர்கள். நிச்சயமாக நாங்கள் இதைக் கட்டுக்குள் கொண்டுவருவோம்" என்று அவர் கூறினார். மேலும், "இந்தப் பிரச்சினை கவலையளிப்பது எங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் இது கவலை அளிக்கிறது" என்றார்.
இந்தியாவில் உள்ள ஒருசில ஸ்டார்ட்அப்கள், டெவலப்பர்கள் கூகுள் மீது புகார் கூறினர். சிசிஐ கூகுள் நிறுவனம் இன்-ஆப் பேமெண்ட்டுகளுக்கு அதிக சேவைக் கட்டணத்தை வசூலிப்பது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சமீபத்தில் விசாரணை தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் பிளே ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதலீடு செய்வதை இந்த சேவை கட்டணம் ஆதரிக்கிறது என்று கூகுள் முன்பு கூறியது. இது சேவையை இலவசமாக விநியோகிக்க முடியும் என்றும் உறுதி கூறியது. ஆனால், பின்னர் அதில் மாற்றங்களைச் செய்துள்ளது.
ஆப்பிள் மற்றும் அமேசான் போன்ற பிற நிறுவனங்களும் இந்தியாவில் இதேபோன்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றன. இச்சூழலில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
"நுகர்வோரின் விருப்பத் தேர்வு மற்றும் சுதந்திரமான போட்டியை சிதைக்கும் விதத்தில் உள்ள இந்த நிலையை நாங்கள் விரும்பவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 நோட்டுகள்! ராஜஸ்தான் அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பறிமுதல்!