கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 நோட்டுகள்! ராஜஸ்தான் அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பறிமுதல்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2.31 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவற்றை செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றக்கொள்ளவோ கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ செய்யலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான மறுதினமே ராஜஸ்தானில் ரூ.2.31 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கி இருக்கின்றன.
ஜெய்ப்பூரில் உள்ள யோஜனா பவன் என்ற அரசு அலுவலகக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கப்பட்டுள்ளன என காவல்துறைக்குத் தகவல் வந்தது. அதன்படி ராஜஸ்தான் போலீசார் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
"இ-ஃபைலிங் திட்டத்தின் கீழ் கோப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. அதற்காக பூட்டியிருந்த இரண்டு அலமாரிகளின் சாவிகள் தேடி எடுத்து திறக்கப்பட்டன. அப்போது ஒரு அலமாரியில் இருந்து கோப்புகளுடன் டிராலி சூட்கேஸ் முழுவதும் பணமும் தங்கமும் சிக்கின. அதைத் தொடர்ந்து ஊழியர்கள் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்" என்று ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
அப்போது அங்கு இருந்த இரண்டு பூட்டப்பட்ட அலமாரிகளைத் திறந்து சோதனையிட்டனர். அதில் கிடைத்த சந்தேகத்துக்கு இடமான பையைத் திறந்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும் தங்கக்கட்டிகளும் இருந்தன. பணம் மற்றும் தங்ககட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றைப் பதுக்கி வைத்தது யார் என அறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.2.31 கோடி என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் ஒரு கிலோ எடை இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இவை அரசு அலுவலர்கள் பெற்ற லஞ்சப்பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கொண்டு ராஜஸ்தான் காவல்துறை ஆய்வு செய்துவருகின்றனர். இது குறித்து 7 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. "இது யாருடைய பணம், எப்படி வந்தது, விசாரணை நடத்தப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர். இந்த அலமாரி நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்தன" என கமிஷனர் ஶ்ரீவத்சவா கூறுகிறார்.
ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை கட்டித் தழுவி தனது நட்பை பரிமாறினார்!!