Google கூகுள் AI Overview தவறான கல்லீரல் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதால் அவற்றை கூகுள் நீக்கியுள்ளது. மருத்துவர்களின் எச்சரிக்கை பின்னணி என்ன?

தவறான தகவல்கள் மற்றும் பிழையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் தனது 'AI Overview' அம்சத்திலிருந்து சில தேடல் முடிவுகளைச் சத்தமில்லாமல் நீக்கியுள்ளது. குறிப்பாக, கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (Liver Function Tests) தொடர்பான தவறான வழிகாட்டுதல்களைத் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நீக்கியுள்ளது. இதன் மூலம், இனி பயனர்கள் இதுபோன்ற முக்கியமான மருத்துவத் தேடல்களுக்கு AI உருவாக்கிய சுருக்கங்களைப் பார்க்க மாட்டார்கள்.

சத்தமில்லாமல் மருத்துவக் குறிப்புகளை நீக்கிய கூகுள்

'ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி' (Android Authority) மற்றும் 'தி கார்டியன்' (The Guardian) வெளியிட்ட அறிக்கையின்படி, தொடர்ந்து எழுந்த புகார்களை அடுத்து கூகுள் தனது AI மேலோட்டத்திலிருந்து (AI Overview) குறிப்பிட்ட மருத்துவத் தகவல்களை நீக்கியுள்ளது. வழக்கமான கூகுள் தேடல் முடிவுகள் மூலம் சுகாதாரத் தகவல்களைப் பெற முடிந்தாலும், கல்லீரல் தொடர்பான குறிப்பிட்ட வார்த்தைகளுக்கான AI உருவாக்கிய சுருக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. பயனர்களுக்கு விரைவான பதில்களை வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு இந்த AI அம்சத்தைக் கூகுள் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மருத்துவ ஆலோசனைகளைத் தானியங்குபடுத்துவது ஆபத்தானது எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

தவறான மருத்துவ முடிவுகளால் வரும் ஆபத்து

வழக்கமாக ஒரு பயனர் கூகுளில் கேள்வி கேட்கும்போது, AI Overview தொடர்புடைய இணையதளங்களின் இணைப்புகளுடன் ஒரு சுருக்கமான பதிலை வழங்கும். ஆனால், இந்த மருத்துவ முடிவுகளில் சில "மிகவும் உணர்திறன் வாய்ந்தவை மற்றும் ஆபத்தானவை" என்று தி கார்டியன் விவரித்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாகக் கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (LFTs) சுட்டிக்காட்டப்படுகின்றன. AI வழங்கிய சுருக்கங்களில், வயது மற்றும் பாலினம், இனம் மற்றும் தேசியம், குறிப்பிட்ட ஆய்வக வழிமுறைகள் போன்ற முக்கியமான உயிரியல் காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.

'டாக்டர் கூகுள்' ஆபத்தானது - நிபுணர்கள் எச்சரிக்கை

மருத்துவ நிபுணர்கள் இந்த AI முடிவுகளை "ஆபத்தானது" என்று முத்திரை குத்தியுள்ளனர். இத்தகைய அரைகுறைத் தகவல்கள் பயனர்களுக்குத் தவறான நம்பிக்கையை அளிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, தீவிர கல்லீரல் பாதிப்பு உள்ள ஒருவர், AI தரும் தவறான தகவலை நம்பித் தங்களுக்கு நோய் இல்லை என்று கருத வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறாமலோ அல்லது உயிர்காக்கும் சிகிச்சையை மேற்கொள்ளாமலோ போகும் அபாயம் உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளித்த கூகுள் செய்தித் தொடர்பாளர், தங்கள் நிறுவனம் தொடர்ந்து கொள்கைகளை மேம்படுத்தவும், AI மாடல்களின் துல்லியத்தைச் செம்மைப்படுத்தவும் முயன்று வருவதாகத் தெரிவித்தார். கல்லீரல் தொடர்பான குறிப்புகள் நீக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல மருத்துவ ஆலோசனைகள் AI Overview முடிவுகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.