சென்னை ஐஐடி-யில் AI படிக்கணுமா? 7 மாசத்துல எக்ஸ்பர்ட் ஆகலாம்! இதுதான் அருமையான சான்ஸ்!
சென்னை ஐஐடி-யின் ப்ரவர்த்தக் அறக்கட்டளை, டைம்ஸ்ப்ரோவுடன் இணைந்து பணிபுரியும் நிபுணர்களுக்காக ஏழு மாத கால மேம்பட்ட AI சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி அதிரடி அறிவிப்பு
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணிபுரியும் நிபுணர்களுக்காகச் சென்னை ஐஐடி-யின் ப்ரவர்த்தக் அறக்கட்டளை, டைம்ஸ்ப்ரோ (TimesPro) நிறுவனத்துடன் இணைந்து ஏழு மாத கால மேம்பட்ட சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏழு மாத காலப் படிப்பு, தரவுகளைக் கொண்டு சரியான முடிவுகளை எடுக்கும் திறனை வளர்ப்பதற்கும், வணிக ரீதியாகப் பயன்படக்கூடிய AI தீர்வுகளை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் கோட்பாடுகளாக மட்டும் இல்லாமல், நடைமுறைப் பயன்பாட்டிற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதில் இது கவனம் செலுத்துகிறது.
பயிற்சி அளிக்கப்படும் தொழில்நுட்பங்கள்
• அடிப்படை: மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங் மற்றும் பைதான் (Python) பயன்படுத்தித் தரவு பகுப்பாய்வு.
• கருவிகள்: டென்சர்ஃபுளோ (TensorFlow) மற்றும் பைடார்ச் (PyTorch) போன்ற தொழில்துறை தரமான கருவிகளில் நேரடிப் பயிற்சி.
• மேம்பட்ட தொழில்நுட்பம்: MLOps, சைபர் பாதுகாப்பு மற்றும் நிஜ உலகத் தரவுத் தொகுப்புகளைக் (Real-world datasets) கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பொறியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் AI துறைக்கு மாற விரும்பும் பணிபுரியும் நிபுணர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஐஐடிஎம் ப்ரவர்த்தக் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவிற்கு (IIT Madras Research Park) நேரில் சென்று கற்கும் வாய்ப்பும் (Campus Immersion) உண்டு.
இந்தப் படிப்பை முடிப்பவர்கள் டேட்டா சயின்டிஸ்ட் (Data Scientist), மெஷின் லேர்னிங் இன்ஜினியர், ஏஐ/எம்எல் ஆராய்ச்சி விஞ்ஞானி, டீப் லேர்னிங் இன்ஜினியர் போன்ற பணிகளுக்குச் செல்லலாம்.
நிபுணர்களின் கருத்து
இது குறித்து ஐஐடிஎம் ப்ரவர்த்தக் ஆலோசகர் டாக்டர் சுசித்ரா வீரவள்ளி கூறுகையில், "இந்தத் திட்டம் கல்வி ஆராய்ச்சியைத் தொழில்துறை பயன்பாட்டுடன் இணைக்கிறது. ஒரு மாடலை உருவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அதை நம்பகமான மற்றும் பாதுகாப்பான முறையில் வணிகப் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் நிபுணர்களை உருவாக்குவதே எங்களது இலக்கு," எனத் தெரிவித்தார்.
உலகளவில் AI சந்தை 2033-க்குள் 4.8 டிரில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இதற்கான மவுசு அதிகரித்து வருகிறது.

