கூகுள் தலைவர் ரூத் போரட், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது சேட்பாட்களைத் தாண்டி அறிவியல் புரட்சிக்கு வித்திடுவதாகக் கூறியுள்ளார். AI மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது 'சேட்பாட்' (Chatbot) என்பதைத் தாண்டி, புற்றுநோயைக் குணப்படுத்துவது உள்ளிட்ட அறிவியல் மற்றும் சமூகப் புரட்சிக்கு வித்திடும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என கூகுள் நிறுவனத்தின் தலைவரும், தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 'ஃபார்ச்சூன் உலகளாவிய மன்றத்தில்' (Fortune Global Forum) பேசிய ரூத் போரட், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்துப் பேசியுள்ளார்.
AI - ஒரு புதிய சகாப்தத்தின் திறவுகோல்
"செயற்கை நுண்ணறிவு வழங்கும் வாய்ப்புகளின் காரணமாக, வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் வாழ்வது நமக்குக் கிடைத்த பாக்கியம்" என்று போரட் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு வெறும் தொழில்நுட்பக் கருவி அல்ல, அது தொழில்துறைகள், பொருளாதாரம் மற்றும் மனித முன்னேற்றத்தை மறுவடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்திற்கான ஊக்கி (catalyst) என்று அவர் விவரித்தார்.
"மக்கள் 'சேட்பாட்கள்' மூலம் செயற்கை நுண்ணறிவை அனுபவித்து வருகின்றனர். இது பயணத்தின் தொடக்கம். ஆனால், இது என் நாட்டிற்கு என்ன அர்த்தம்? என் வணிகத்திற்கு என்ன அர்த்தம்? என்பதுதான் அடுத்த கேள்வி. சுகாதாரம் மற்றும் அறிவியலில் நாம் ஏற்கனவே அனுபவித்து வரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் போதிய அளவு பாராட்டப்படவில்லை," என்றும் அவர் கூறினார்.
ஆல்ஃபாஃபோல்ட் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு
ஆரோக்கியத் துறையில், செயற்கை நுண்ணறிவு செலுத்தும் பங்கை விளக்குவதற்காக, கூகுளின் 'டீப்மைன்ட்' (DeepMind) நிறுவனத்தின் 'ஆல்ஃபாஃபோல்ட்' (AlphaFold) திட்டத்தை போரட் சுட்டிக்காட்டினார்.
புரத அமைப்புகளை முப்பரிமாணத்தில் (3D) கணிக்கும் ஆல்ஃபாஃபோல்ட் திட்டம், "நமது வாழ்நாளில் மருந்து கண்டுபிடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பங்களிப்பு" என்று அவர் பாராட்டினார்.
ஆல்ஃபாஃபோல்ட் அளித்த தகவல்களைக் கொண்டு 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், முன்னர் அணுகுவதற்குச் சிக்கலாகக் கருதப்பட்ட நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கான நம்பிக்கை
புற்றுநோயைக் குணப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை ரூத் போரட் வலியுறுத்தினார்.
"நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது உயிர் பிழைப்பதற்கும், சிகிச்சை முறையின் சிரமத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானது என்று நாம் அனைவரும் அறிவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
"புற்றுநோயை ஏற்படுத்தும் மெட்டாஸ்டேடிக் செல்களை (Metastatic cells) ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது. ஆனால், செயற்கை நுண்ணறிவால் அதைச் செய்ய முடியும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக, "நம் வாழ்நாளிலேயே புற்றுநோயைக் குணப்படுத்த நம்மால் நிச்சயம் முடியும்" என்று அவர் உறுதிபடக் கூறினார்.
மருந்து கண்டுபிடிப்பை விரைவுபடுத்தும் டீப்மைன்ட்
அல்பாபெட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவான டீப்மைன்ட் மற்றும் அதன் மருந்து கண்டுபிடிப்பு துணை நிறுவனமான ஐசோமார்பிக் லேப்ஸ் (Isomorphic Labs) ஆகியவை புதிய மருந்துகளை உருவாக்கத் தேவைப்படும் காலத்தைக் குறைக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன.
டீப்மைன்ட் தலைமைச் செயல் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis) சமீபத்தில் அளித்த பேட்டியில், "அடுத்த ஓரிரு வருடங்களில், மருந்துகளைக் கண்டுபிடிக்கும் காலம் பல ஆண்டுகளிலிருந்து சில மாதங்களாகக் குறையும் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை அதையும் விட வேகமாக இருக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.
புரதங்களின் செயல்பாடுகளை மட்டுமல்லாமல், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளைக் கண்டறியவும் உதவும் வகையில், ஆல்ஃபாஃபோல்ட் மாதிரியின் மிகவும் மேம்பட்ட பதிப்பை டீப்மைன்ட் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
