Google கூகுள் போட்டோஸில் ஜெமினி AI மூலம் வாய்ஸ் கமெண்ட் கொடுத்து போட்டோ எடிட் செய்யும் வசதி அறிமுகம். தமிழ் மொழியிலும் இது செயல்படும்.
கூகுள் நிறுவனம் தனது 'கூகுள் போட்டோஸ்' (Google Photos) செயலியில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட 'ஜெமினி' (Gemini) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இனி கடினமான எடிட்டிங் டூல்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. வெறும் குரல் மூலமாகவோ (Voice Command) அல்லது டைப் செய்தோ தங்கள் புகைப்படங்களை மிக எளிதாக எடிட் செய்துகொள்ளலாம். இந்த புதிய வசதி தற்போது இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
எந்தெந்த மொழிகளில் கிடைக்கும்?
இந்த புதிய AI வசதி ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இயங்கும், குறைந்தபட்சம் 4GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
கூகுள் போட்டோஸ் செயலியில், நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவைத் தேர்வு செய்து, "Help me edit" என்று சொன்னாலே அல்லது டைப் செய்தாலே போதும். ஜெமினி AI உடனே வேலை செய்யத் தொடங்கிவிடும். உதாரணமாக, "பின்னணியை நீக்கு" (Remove background) அல்லது "வெளிச்சத்தை அதிகரி" (Increase brightness) என்று தமிழில் கட்டளையிட்டால், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து கொடுக்கும்.
மூன்று முக்கிய சிறப்பம்சங்கள்
இந்த அப்டேட்டில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன:
1. Conversational Photo Editing: நண்பரிடம் பேசுவது போல AI-யிடம் பேசி எடிட் செய்யலாம்.
2. Personalised AI Edits: புகைப்படத்தில் உள்ள தேவையற்ற நபர்களையோ அல்லது பொருட்களையோ அகற்றச் சொல்லலாம்.
3. Nano Banana Integration: இது ஒரு மேம்பட்ட டூல். இதன் மூலம் ஒரே கமெண்டில் பல்வேறு வகையான ஸ்டைல் மாற்றங்களைச் செய்ய முடியும்.
எளிமையான எடிட்டிங் அனுபவம்
புகைப்பட எடிட்டிங் பற்றித் தெரியாதவர்கள் கூட, இனி நிபுணர்களைப் போலப் புகைப்படங்களை மாற்றியமைக்க இந்த வசதி உதவும். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முதற்கட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


