Google AI Studio 2026-ம் ஆண்டு ரோபோக்களின் ஆண்டாக இருக்கும் என கூகுள் AI தலைவர் கணித்துள்ளார். எம்ப்பாடிட் ஏஐ மற்றும் டெஸ்லா ஆப்டிமஸ் பற்றிய முழு விபரம் உள்ளே.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இதுவரை கணினிகள் மற்றும் மென்பொருள்களுக்குள் மட்டுமே சுருங்கி இருந்தது. ஆனால், தற்போது அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, மனிதர்களைப் போல நடமாடும் இயந்திரங்களில் புகுத்தப்படவுள்ளது. கூகுள் AI ஸ்டுடியோவின் (Google AI Studio) தலைவர் லோகன் கில்பாட்ரிக், 2026-ம் ஆண்டு ரோபோக்களுக்கு மிக முக்கியமான மற்றும் பெரிய ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

லோகன் கில்பாட்ரிக் கூறியது என்ன?

சமீபத்தில் 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட கில்பாட்ரிக், "2026-ம் ஆண்டு எம்ப்பாடிட் ஏஐ-க்கு (Embodied AI) ஒரு மிகப்பெரிய ஆண்டாக அமையப்போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஆய்வகங்களுக்குள் முடங்கி இருந்த ரோபோக்கள், நாம் எதிர்பார்ப்பதை விட மிக விரைவில் நிஜ உலகில், மக்கள் நடமாடும் இடங்களில் வலம் வரத் தொடங்கும் என்பதே இதன் அர்த்தம்.

'எம்ப்பாடிட் ஏஐ' (Embodied AI) என்றால் என்ன?

'எம்ப்பாடிட் ஏஐ' என்பது உடலைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு. அதாவது, வெறும் மூளையாக (Software) மட்டும் இல்லாமல், ஒரு ரோபோவின் உடலுக்குள் இந்த AI பொருத்தப்படும். இதனால் அந்த இயந்திரத்தால் பார்க்க முடியும், நகர முடியும் மற்றும் சுற்றுப்புறச் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல செயல்பட முடியும்.

ரோபோட்டிக்ஸில் கூகுளின் தீவிரம்

இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் 'ஜெமினி 3' (Gemini 3) மாடலை வெளியிட்டது. அதே சமயம், ரோபோட்டிக்ஸ் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், 'ஜெமினி ரோபோட்டிக்ஸ் 1.5' என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரோபோக்கள் நிஜ உலகத் தரவுகளைக் கொண்டு சிக்கலான வேலைகளையும் கற்றுக்கொள்ள முடியும். முன்பெல்லாம் கணிக்க முடியாத சூழலில் ரோபோக்கள் திணறும், ஆனால் கூகுளின் இந்த புதிய தொழில்நுட்பம் அந்த குறையைத் தீர்க்கும்.

ரோபோக்களின் தற்போதைய நிலை

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தற்போதைய ரோபோக்களுக்கு சில எல்லைகள் உள்ளன. உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த 1X Technologies நிறுவனம் 'நியோ' (Neo) என்ற மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியது. இதன் விலை சுமார் 20,000 டாலர்கள். இது வீட்டு வேலைகளைச் செய்யும் என்றாலும், மிகவும் சிக்கலான பணிகளைச் செய்ய இன்னும் மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. முழுமையான சுதந்திரத்துடன் செயல்படும் ரோபோக்கள் இன்னும் உருவாக்கப் பணியில்தான் உள்ளன.

எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா ஆப்டிமஸ்

ரோபோட்டிக்ஸ் போட்டியில் கூகுள் மட்டுமல்ல, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் தீவிரமாக உள்ளது. டெஸ்லா உருவாக்கி வரும் 'ஆப்டிமஸ்' (Optimus) ரோபோ, மனிதர்களை விட 5 மடங்கு திறமையாக செயல்படும் என்று மஸ்க் கூறியுள்ளார். எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்யும் என்றும், அதனால் மனிதர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். 2026-ல் இந்தப் போட்டி இன்னும் சூடுபிடிக்கும்.