ஐபோன் 15 வாங்கப் போவதாக அறிவித்த எலான் மஸ்க்! காரணம் என்ன சொன்னார் தெரியுமா?
எலான் மஸ்க், தானும் ஒரு ஐபோன் 15 மொபைலை வாங்கப்போவதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 (iPhone 15) மொபைல் செப்டம்பர் 12 அன்று அந்நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 முதல் ஐபோன் 15 விற்பனைக்கு வந்தது. உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கிச் செல்கின்றனர்.
இதற்கு மத்தியில், ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், தானும் ஒரு ஐபோன் 15 ஐ வாங்கப்போவதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார். அவர் கூறியிருக்கும் பதில் பல ஐபோன் பிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதலில் ஆப்பிள் சிஇஓ டிம் குக், பிரபல புகைப்படக் கலைஞர்களான ஸ்டீபன் வில்க்ஸ் மற்றும் ரூபன் வு ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். ஒரு படத்தில், இரு புகைப்படக் கலைஞர்களும் டிம் குக்கிடம் தங்கள் தாங்கள் எடுத்த படங்களைக் காட்டுவதையும் காணமுடிகிறது.
பிரக்யான் ரோவர் நிலவில் தேசியச் சின்னத்தை தெளிவாகப் பதிவு செய்யவில்லை: இஸ்ரோ தகவல்
"உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களான ஸ்டீபன் வில்க்ஸ் மற்றும் ரூபன் வு ஆகியோர் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மூலம் வரம்பற்ற படைப்பாற்றலை காட்டியிருக்கிறார்கள். அவர்கள் எடுத்த தெளிவான புகைப்படங்கள் ரோட் தீவில் உள்ள கோடைகாலத்தின் அழகில் இருந்து யூட்டாவில் வேற்றுகிரகம் போலக் காட்சி அளிக்கும் பாலைவனங்கள் வரை வியப்பூட்டும் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். உங்கள் புகைப்படங்களைக் எனக்குக் காட்டியதற்கு நன்றி" என்று டிம் குக் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "ஐபோனில் எடுக்கும் படங்களும் வீடியோக்களும் நம்பமுடியாதது அளவுக்கு அழகானவை" என்றார்.
மற்றொரு பதிவில், டிம் குக் நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார். "இன்று ஆப்பிள் ஐந்தாவது அவென்யூவில் எங்கள் புதிய தயாரிப்புகளை கொண்டாடியது மிகவும் பிடித்திருந்தது. உலகம் முழுவதும் கிடைக்கும், அனைத்து புதிய ஐபோன் 15 மாடல்கள், ஆப்பிள் வாட்ச்-இன் முதல் கார்பன்-நியூட்ரல் மாடல்கள், மற்றும் சமீபத்திய ஏர்பாட்கள் இங்கே உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவால் ஈர்க்கப்பட்ட எலான் மஸ்க், "நானும் ஒன்றை வாங்குகிறேன்!" என் கூறினார். எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. "அவர் எந்த மாடலை, எந்த நிறத்தைத் தேர்வு செய்வார் என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்" என ஒருவர் கூறுகிறார். "நீங்களும் ஒன்றை வாங்குகிறீர்களா? அல்லது ஆப்பிள் நிறுவனத்தையே வாங்குகிறீர்களா?" என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதுவும் செய்யத் துணிந்த ஐபோன் பிரியர்கள்! மும்பை ஆப்பிள் ஸ்டோரில் மணிக்கணக்கில் அலைமோதிய கூட்டம்!