சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை: "மின்கட்டணம் பாக்கி” என்ற SMS மூலம் பணம் பறிக்கும் கும்பல்
கடந்த மாத மின்கட்டணத்தில் நிலுவையில் உள்ளது அந்த தொகையை உடனே செலுத்த இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று SMS அனுப்பி பணமோசடியில் சிலர் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய அது தொடர்பான தொழில்நுட்ப குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் 4,047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2,160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1,194 கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மோசடி வழக்குகள் மற்றும் 1,093 ஓடிபி மோசடிகள் பதிவாகியுள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு மோசடி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை அல்லது மின்சார கட்டணத்தில் பாக்கி உள்ளது அதனை உடனே ஆன்லைனில் இந்த லிங்கை கிளிக் செய்து பணத்தை செலுத்துங்கள் என்று SMS அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் தாமாக திருடப்படுகிறது. குறிப்பாக ஆண்டிராய்டு பயனாளர்கள் இதில் அதிகம் சிக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் ஜார்கண்டில் கைது செய்துள்ளனர்.
முதலில் சிம்கார்டு விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து தகவலைகளைப் பெற்ற பிறது பொதுமக்களுக்கு SMS அனுப்புகின்றனர். மேலும் நீங்கள் பணம் செலுத்துவதற்கான கெடு காலாவதியாகிவிட்ட காரணத்தால் இன்று இரவு உங்கள் வீட்டிற்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறிப்பிடுகின்றனர். இதனை பார்க்கும் நபர்கள் உடனடியாக பணத்தை செலுத்த லிங்கை கிளிக் செய்து இதுபோன்ற பிரச்சினையில் சிக்கிக் கொள்வதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Fastag பேலன்சை வெறும் SMS மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்! எப்படி?? இப்படி..!
நாடு முழுவதும் மின் கட்டண மோசடி தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். புகார்களின் அடிப்படையில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி சமபவங்கள் பெரும்பாலும் ஜார்கண்ட், மேற்குவங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.