Electric Scooter Fire Accident: சார்ஜ் ஏற்றும் போது விபரீதம்... கொளுந்து விட்டு எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Stopped Electric Scooter breaksout Fire In Nellai district: தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப் பிடித்து எரியும் சம்பவங்கள் நிற்பதாக தெரியவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப் பிடித்து எரிவது சாதாரண சம்பவங்களாக மாறி வருகின்றன.
இந்த வரிசையில், தமிழ் நாட்டின் நெல்லை மாவட்டத்தை அடுத்த பேட்டை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த நபர் பயன்படுத்தி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப் பிடித்து எரிந்தது. கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்த டேனியல் ஆசீர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இருசக்கர வாகனத்தின் தேவை அதிகம் என்பதால், இவர் தொழில் நிமித்தமாக சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
அந்த வகையில், நேற்று காலையில் ஆசீர் தனது வீட்டு வளாகத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மின் இணைப்பு மூலம் சார்ஜ் ஏற்றினார். சார்ஜ் ஏறிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப் பிடித்து எரிய தொடங்கியது. தீப் பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்த்து டேனியல் ஆசீர் அதிர்ச்சி அடைந்தார்.
தீயை அணைக்க முயற்சி:
பின் விரைந்து செயல்பட்ட டேனியல் ஆசீர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார். எனினும், தீ மளமளவென பரவி ஸ்கூட்டர் முழுக்க கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து, அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின் இணைப்பை துண்டித்து ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீ விபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேத் அடைந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி:
சமீபத்தில் சென்னையில் அமைந்துள்ள ஏத்தர் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விற்பனை மையத்தில் இருந்து யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், விற்பனையகத்தில் இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் விற்பனை மைய வளாகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.