ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உறக்க நிலைக்குச் சென்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் திங்கட்கிழமை காலை 8:00 மணி அளவில் ஓய்வு நிலைக்குச் (Sleep Mode) சென்றுவிட்டது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஏற்கெனவே பிரக்யான் ரோவர் கடந்த சனிக்கிழமை உறக்க நிலைக்குச் சென்றுவிட்டது.
இதுகுறித்து இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "விக்ரம் லேண்டர் இன்று 8:00 மணி அளவில் உறக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன், ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகிய கருவிகளும் செயல்பாட்டை நிறுத்தின. அவற்றில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமிக்குக் கிடைத்துவிட்டன" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, விக்ரம் லேண்டரை தரையிறங்கிய இடத்தில் இருந்து புதிய இடத்தில் மீண்டும் தரையிறக்கும் ஹாப்பிங் எனப்படும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அனைத்து கருவிகளும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டர் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விக்ரம் லேண்டரும் பிரக்யான் அருகிலேயே உறக்க நிலையில் இருக்கும். செப்டம்பர் 22, 2023 இல் மீண்டும் நிலவில் பகல் ஆரம்பிக்கும்போது லேண்டர், ரோவர் இரண்டும் மீண்டும் விழிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இஸ்ரோ சொல்கிறது.
ஹாப்பிங் சோதனையின்போது விக்ரம் லேண்டரை மேலே உயர்த்தி மீண்டும் புதிய இடத்தில் தரையிறக்கியபோது எடுத்த படங்களையும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் நிலவில் பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொண்டு முக்கியத் தகவல்களைச் சேகரித்துள்ளன. ரோவரில் உள்ள ஆல்பா பார்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) என்ற கருவி நிலவில் கந்தகம் மற்றும் பிற சிறிய தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது. அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவையும் நிலவில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டது. லேண்டரில் உள்ள மற்றொரு கருவி ILSA நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளது. RAMBHA-LP என்ற ஆய்வுக் கருவி நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
சத்தமில்லாமல் வசூல் வேட்டை நடத்தும் மெட்டா! பிசினஸ் உரையாடல்களை காசாக்கும் வாட்ஸ்அப்!