சுழன்று விளையாடிய பிரக்யான் ரோவர்! பார்த்து ரசித்த விக்ரம் லேண்டர்! இஸ்ரோ சொன்ன குட்டி ஸ்டோரி!
நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் சுழன்ற காட்சி விக்ரம் லேண்டர் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுற்றிச் சுழன்ற காட்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. விக்ரம் லேண்டரின் கேமராவால் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, ரோவர் பாதுகாப்பான பாதையைத் தேடி சுழல்வதைக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கியது. தற்போது லேண்டர் மற்றும் ரோவர் பல அறிவியல் சோதனைகளை மேற்கொண்டு கடினமாக உழைத்து வருகின்றன. நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்தல், பிரக்யான் ரோவரை லேண்டரில் இருந்து நிலவில் இறக்குதல் ஆகிய நோக்கங்கள் வெற்றி அடைந்த நிலையில், சந்திரயான்-3 திட்டத்தின் மூன்றாவது முக்கிய நோக்கமான ஆய்வுப் பணிகள் சென்ற ஒரு வார காலமாக நடைபெறுகின்றன.
நிலவில் சல்பர் இருக்கா? விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பை APXS ஆய்வு மூலம் உறுதி செய்த பிரக்யான் ரோவர்!
ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மூலம் அறிவியல் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. அவற்றை இஸ்ரோ அவ்வப்போது வெளியிடுகிறது. இஸ்ரோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், பிரக்யான் ரோவர் புதிய பாதையில் செல்ல பாதையைத் தேடி சுழலும் காட்சியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளது.
ரோவர் எப்போதும் சீராகப் பயணிப்பதில்லை. திங்கட்கிழமை, பிரக்யான் ரோவர் அதன் பாதைக்கு நேராக ஒரு பெரிய பள்ளத்தை எதிர்கொண்டதாகவும், 3 மீட்டர் தூரத்தில் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை சரியாகக் கணித்த ரோவர் தன் பாதையை மாற்றிக்கொண்டு புதிய பாதையில் சென்றதாவும் இஸ்ரோ தெரிவித்தது.
இப்போது, ரோவர் நிலவில் புதிய பாதையில் மாற முயற்சி செய்வது எப்படி என்பதை லேண்டர் கேமரா மூலம் வீடியோவாகக் காட்டியிருக்கிறது. பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழலும் காட்சியை வர்ணித்துள்ள இஸ்ரோ, "நிலவின் மடியில் உல்லாசமாக விளையாடும் குழந்தையை தாய் பாசத்துடன் பார்த்து மகிழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது இல்லையா?" என்று கூறியுள்ளது.
முன்னதாக இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, ரோவரில் உள்ள ஆல்பா பார்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) என்ற கருவி நிலவில் கந்தகம் மற்றும் பிற சிறிய தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது தெரியவந்தது. இதன் மூலம் ஏற்கெனவே விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை வெளியான சந்திரயான்-3 அப்டேட்டில், பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது என்றும் இஸ்ரோ கூறியது. "Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si மற்றும் O ஆகியவையும் எதிர்பார்த்தபடி கண்டறியப்பட்டுள்ளன. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று இஸ்ரோ தெரிவித்தது நினைவூட்டத்தக்கது.
ஸ்மைல் பிளீஸ்! விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் பிடித்த பிரக்யான் ரோவர்!