ஸ்பேஸ் ட்ரிப் போகனுமா? கார் வாங்குங்க போதும் - லேண்ட் ரோவர் அதிரடி!
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு இலவச ஸ்பேஸ் ட்ரிப் வழங்கும் போட்டியை அறிவித்து இருக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு விர்ஜின் கேலக்டிக்கில் இலவச ஸ்பேஸ் ட்ரிப் அழைத்து செல்ல முடிவு செய்து இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் லேண்ட் ரோவர் மற்றும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனங்கள் இடையே வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. கூட்டணியின் பேரில் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது வாகனங்களை போக்குவரத்து மற்றும் விர்ஜின் கேலக்டிக் ஸ்பேஸ்ஷிப்-ஐ டோ செய்ய வழங்கி வருகிறது.
இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டணி 2021 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த கூட்டணி புதுப்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் வெற்றிகரமாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று அசத்தியது. இந்த நிலையில், லேண்ட் ரோவர் நிறுவனம் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துடன் இணைந்து "அட்வென்ச்சர் ஆஃப் லைஃப்டைம்" பெயரில் ஸ்வீப்ஸ்டேக் போட்டியை அறிவித்து இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஒருவர் விர்ஜின் கேலக்டிக் விண்கலத்தில் விண்வெளி பயணத்தை இலவசமாக மேற்கொள்ள முடியும். விண்வெளி பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் லேண்ட் ரோவர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. ஒரு வெற்றியாளர் தவிர மற்றவர்களுக்கு லேண்ட் ரோவர் எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் டிரைவ், பிராண்டெட் மெர்சண்டைஸ் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த சலுகை அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்வோர் லேண்ட் ரோவர் காரை வைத்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள ஸ்வீப் ஸ்டேக்ஸ் வலைப்பகக்த்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுதவிர லேண்ட் ரோவர் காரை வாங்க முன்பதிவு அல்லது ஜூன் 20, 2022-க்குள் காரை வாங்க வேண்டும்.
விர்ஜின் கேலக்டிக் விண்கலம் 90 நிமிடங்கள் பயண நேரத்தை கொண்டது ஆகும். இந்த பயணத்தில் விண்கலம் புவியின் விளிம்பு வரை சென்று மீண்டும் பூமியில் தரையிறங்கும். பூமியில் தரையிறங்கும் முன் விண்வெளியில் ஜீரோ கிராவிட்டி அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும். விர்ஜின் கேலக்டிக் விண்கலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான கட்டணம் 4.5 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.44 கோடி என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவோர் எந்த தேதியில் விண்வெளி பயணம் மேற்கொள்வர் என்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த போட்டி வெற்றியாளர் ஆகஸ்ட் 15, 2022 அன்று அறிவிக்கப்பட இருக்கிறார்.