Apple ஆப்பிள் நிறுவனம் தனது எம்-சீரிஸ் சிப்களை தயாரிக்க மீண்டும் இன்டெல் நிறுவனத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் சிப் தயாரிப்பில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
தொழில்நுட்ப உலகில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நிரூபிக்கவிருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு, "இனி இன்டெல் சிப்கள் (Intel Chips) வேண்டாம், நாங்களே சொந்தமாகத் தயாரித்துக் கொள்கிறோம்" என்று கூறி ஆப்பிள் சிலிக்கான் (Apple Silicon) புரட்சியைத் தொடங்கியது ஆப்பிள். ஆனால், இப்போது மீண்டும் இன்டெல் நிறுவனத்தின் கதவைத் தட்ட ஆப்பிள் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பிரபல தொழில்நுட்ப ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2027-ம் ஆண்டு முதல் ஆப்பிள் தனது என்ட்ரி-லெவல் (Entry-level) எம்-சீரிஸ் சிப்களைத் தயாரிக்க இன்டெல் நிறுவனத்துடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது.
மீண்டும் இணையும் பழைய ஜோடி?
ஆப்பிள் நிறுவனம் தனது மேக் (Mac) கணினிகளுக்கு சொந்தமாக 'M' சீரிஸ் சிப்களை வடிவமைத்து வந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வது தைவானைச் சேர்ந்த TSMC நிறுவனம் தான். உலகின் அதிநவீன சிப் தயாரிப்பு தொழில்நுட்பம் TSMC வசம் இருப்பதால், ஆப்பிள் முழுமையாக அந்நிறுவனத்தையே சார்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சார்பு நிலையைக் குறைக்க ஆப்பிள் விரும்புவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, தனது பழைய கூட்டாளியான இன்டெல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளை (Foundry) பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்த சிப்கள் தயாரிக்கப்படும்?
ஆப்பிளின் அனைத்து சிப்களையும் இன்டெல் தயாரிக்கப்போவதில்லை. ஆப்பிளின் 'என்ட்ரி லெவல்' சாதனங்களான மேக்புக் ஏர் (MacBook Air) மற்றும் குறைந்த விலை ஐபேட்களில் (iPad) பயன்படுத்தப்படும் சிப்களை மட்டுமே இன்டெல் தயாரிக்க வாய்ப்புள்ளது.
இன்டெல் தனது அதிநவீன 18AP உற்பத்தி முறையைப் (Process Node) பயன்படுத்தி இந்த சிப்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி சிப்களை இன்டெல் நிறுவனம் ஆப்பிளுக்காகத் தயாரித்துக் கொடுக்கும்.
TSMC-க்கு செக் வைக்கும் ஆப்பிள்?
தற்போது ஆப்பிளின் M1, M2, M3 என அனைத்து சிப்களும் TSMC நிறுவனத்தில் தான் தயாராகின்றன. ஒரே நிறுவனத்தை நம்பியிருப்பது ஆபத்து என்பதால், ஆப்பிள் தனது உற்பத்தியைப் பரவலாக்க (Diversification) முடிவு செய்துள்ளது.
இன்டெல் நிறுவனமும் தற்போது சிப் வடிவமைப்பைத் தாண்டி, மற்ற நிறுவனங்களுக்குச் சிப் தயாரித்துக் கொடுக்கும் 'பவுண்டரி' (Foundry) பிசினஸில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆப்பிள் போன்ற ஒரு மெகா வாடிக்கையாளர் கிடைப்பது இன்டெல் நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
அடுத்தது என்ன?
2026-ம் ஆண்டிற்குள் இதற்கான வடிவமைப்புப் பணிகள் முடிவடைந்து, 2027-ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஆப்பிள் தயாரிப்புகளில் மீண்டும் 'Intel Inside' என்ற வாசகத்தைக் காண முடியாவிட்டாலும், இன்டெல் தயாரித்த பாகங்கள் மீண்டும் இடம்பிடிக்கும் என்பது உறுதி!


