டுவிட்டர், ஃபேஸ்புக்கை போல் அமேசான் நிறுவனத்திலும் பணிநீக்கம் செய்ய திட்டம்!
டுவிட்டர் , ஃபேஸ்புக் நிறுவனங்களில் எக்கச்சக்க பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனத்திலும் சுமார் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு சுமார் பாதி பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்திலும் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்நிலையில் அமேசான் இந்த வாரத்தில் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் செய்திநிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்பு கடந்த 2001 ஆம் ஆண்டில் டாட்-காம் செயலிழப்பின் போது அமேசான் சுமார் 1,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அதன்பிறகு தற்போது வரவிருக்கும் பணிநீக்கம் தான் அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை (அமேசான் வருவாய் உட்பட) கணிசமாக அதிகரித்த போதிலும், பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Twitter நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தாரா எலான் மஸ்க்?
தற்போது, உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் அமேசானில் பணியாற்றுகின்றனர். இதில் பகுதி நேர
ஊழியர்களும் உள்ளனர். குறிப்பாக அமேசான் அசிஸ்டெண்ட், அலெக்ஸா துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தான் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அமேசானின் இந்த நடவடிக்கையால், சில்லறை வணிகப் பிரிவில் உள்ள ஊழியர்களையும், HR துறையையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அமேசானின் பணி நீக்கம் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனமும் கட்டுரை எழுதியுள்ளது. அதன்படி, அமேசான் சிஇஓ அண்டி ஜேசி, அலெக்ஸா துறையிலுள்ள சுமார் 10 ஆயிரம் பணியாளர்களின் பணிகளை மிகநெருக்கமாக இருந்து கண்காணித்து வந்தார் என்று கூறப்படுகிறது. மேலும், எதிர்பார்த்த அளவில் அத்துறையில் லாபம் பெற முடியவில்லை என்றும், மாறாக அத்துறையில் ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக , மிக நீண்ட கால ஆய்வுக்குப் பின்னரே அவர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, உலகளாவிய பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக, அமேசான் மட்டுமே இவ்வாறு பணி நீக்கம் செய்யவில்லை. இதற்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தில் இந்த மாத தொடக்கத்தில் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர். Meta நிறுவனம் சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்தது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், இந்தாண்டு பொருளாதார நெருக்கடி பெருநிறுவனங்களையே விட்டு வைக்கவில்லை. இப்படியான சூழலில், சிறு குறு நிறுவனங்களும் பரிதாபமாக உள்ளது.