மீண்டும் மீண்டுமா? இந்திய 5ஜி வெளியீடு இன்னும் லேட் ஆகுமாம்... என்ன காரணம் தெரியுமா?
இந்திய சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கான 5ஜி சேவை லீசிங் முறையில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 ஜூலை மாத வாக்கில் நடைபெற இருந்தது. 5ஜி சேவைக்கான வர்த்தக வெளியீடு சுத்ந்திர தினத்தன்று நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் மேலும் தாமதம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே நிலவும் தனியார் 5ஜி நெட்வொர்க் பிரச்சினை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்காத காரணத்தால், ஏலம் தாமதம் ஆகி வருவதாக தெரிகிறது. டெலிகாம் துறை, டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் விதித்து இருக்கும் பல்வேறு பரிந்துரைகளை ஏற்ற பின், 5ஜி கால் விலை மற்றும் ஏலத்திற்கு பின் ஸ்பெக்ட்ரத்தின் கால அளவு உள்ளிட்டவைகளை உயர் அதிகாரிகள் அடங்கிய அலுவலர்கள் குழு முடிவு செய்யும்.
லீசிங் முறையில் 5ஜி சேவை:
தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வழங்கும் விவகாரத்தில் அனுமதி வழங்கப்படும் என்றே மூத்த அதிகாரி தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கான 5ஜி சேவை லீசிங் முறையில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
5ஜி நெட்வொர்க் பிரச்சினை சேவை வழங்குவோர் மற்றும் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம், அமேசான் இந்தியா, மெட்டா, டாடா கன்சல்டன்சி மற்றும் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே ஏற்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனங்கள் பொதகு நெட்வொர்க்கில் இணைக்கப்படாது என்பதால், இவை எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் தெரிவித்து இருக்கிறது.
நேரடி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு:
வழக்கமான நிர்வாக கட்டணத்தில் நேரடியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. பொது நெட்வொர்க்குகள் தேவைப்படும் சேவையை சீராக வழங்க முடியாது என்பதால், தனியார் 5ஜி நெட்வொர்க்குகள் தலைசிறந்த சேவையை வழங்க முடியும் என்றும் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் தெரிவித்து உள்ளது.
இந்த நெட்வொர்க்குகள் டெலிகாம் மற்றும் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மேலும் தெரிவித்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பையும் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மேற்கோள் காட்டி இருக்கிறது.