குன்னூர்,

குன்னூர் அருகே திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி அடிக்கடி காவலாளர்கள் விசாரணைக்கு அழைப்பதால் மனமுடைந்த இளைஞர் காவல் நிலையம் முன்பு சாணிப்பவுட (வி‌ஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குன்னூர் அப்பிள் பீ சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் ஜான் என்கிற நாகராஜ் (25). ஒரு வருடத்திற்கு முன்புத் திருட்டு வழக்கு ஒன்றில் இவருடைய நண்பர் ராஜேஷ் சம்பந்தப்பட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து ராஜேஷுடனும், நாகராஜிடமும் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 6–ஆம் தேதி குன்னூர் அருகேயுள்ள சின்னவண்டிச் சோலையில் பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு, ஒரு மர்ம நபர் 15 பவுன் நகை, ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்று விட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக வெலிங்டன் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை வழக்கில் “நாகராஜின் நண்பர் ராஜேஷ் ஈடுபட்டு இருக்கலாம்” என்று காவலாளருக்குச் சந்தேகம் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காவலாளர் நாகராஜை விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வந்தனர். குன்னூரில் உள்ள ஒரு பங்களாவில் வேலை பார்த்து வரும் நாகராஜின் தாய் வசந்தாவை காவலாளர்கள் தொடர்புக் கொண்டு நாகராஜை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று வெலிங்டன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

காவலாளர்களும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாகராஜிடம் தனியாக விசாரணை நடத்தினர்.

காவலாளர்கள் அடிக்கடித் தன்னை திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி விசாரணை நடத்துவது நாகராஜுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியது.

இதனிடையே விசாரணையின்போது நாகராஜ் குடிக்க தண்ணீர் கேட்டார். காவலாளர்கள் தண்ணீர் வழங்கியவுடன், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து, காவல் நிலையம் முன்பு நாகராஜ், தான் மறைத்து வைத்திருந்த சாணிப்பவுடரை (வி‌ஷம்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே காவலாளர்கள் ஆட்டோ மூலம் நாகராஜை குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு நாகராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தன்னை திருடன் போன்று சித்தரித்து அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்பதில் மன வேதனை அடைந்த நாகராஜ் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.