விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் விவகாரம் காரணமாக தமிழரசன் என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அருகே பெண்ணை காதலித்த வைரமுத்து என்ற வாலிபரை பெண்ணின் குடும்பத்தால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் தமிழரசன் (26). கூலி வேலை செய்து வந்தார்.
தமிழரசன் கொலை
இவரும் செவலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழரசன் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
தனிப்படை அமைத்து விசாரணை
நேற்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் தமிழரசன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 பேர் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சங்கரபாண்டி என்கிற அருண் (22), மணிகண்டன் (20), ரஞ்சித்குமார் (24), ஜெயசங்கர் (22), முத்துப்பாண்டி (22), செல்வம் (25), சுரேஷ் (42) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தவிர மற்ற 6 பேரை கைது செய்தனர். விசாரணையில், விசாரணையில், தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த விவகாரத்தில் தமிழரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
