Youth lost Rs.7.60 lakh for foreign jobs police Complaint registered

நாமக்கல்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி ரூ.7.60 இலட்சத்தை இழந்த இளைஞர், பறிகொடுத்த பணத்தை மீட்டு தருமாறு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் இந்திரா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஏ.கே.தங்கவேல். இவர், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், "கடந்த 2015-ஆம் ஆண்டில் கோவை சுங்கம் சாலை சண்முகா நகரைச் சேர்ந்த டேனியல் சார்லஸ் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறினார். எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார்.

அதனை நம்பி 2016-ஆம் ஆண்டில் ரூ.7.60 இலட்சத்தை, அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பினேன். அவர் வேலைவாங்கித் தரவும் இல்லை, என்னுடைய பணத்தை திருப்பி தரவும் இல்லை.

எனவே, இதுகுறித்து நீங்கள் உரிய விசாரணை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், பலரிடம் டேனியல் சார்லஸ் மோசடி செய்ததும், பணம் திரும்பக் கேட்டதால் அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றியதும், புகாரையறிந்து அவர் கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை காவலாளர்கள் கன்னியாகுமரி சென்று டேனியல் சார்லஸை கைது செய்தனர்.

இதுபோன்று, "வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் நபர்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என்று காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.