திருப்பூர்

திருப்பூரில் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் கல்லால் அடித்து கொல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ரவி (34). திருமணம் ஆகாத இவர் அந்த பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ரவி, மனநலம் பாதிக்கப்பட்டு திருப்பூர் பகுதியில் சுற்றி திரிந்ததாராம். இந்த நிலையில் திருப்பூர் - தாராபுரம் சாலையி, உள்ள கரட்டாங்காடு 6-வது வீதியில் உள்ள ஒரு கட்டடத்தின் அருகில் நேற்று காலை ரவி தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான காவலாளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், காவல் துணை ஆணையர் கயல்விழி, உதவி ஆணையர் தங்கவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். காவலாளர்களின் மோப்ப நாய் "வெற்றி" அந்த இடத்தை மோப்பம் செய்து சிறிது தூரம் ஓடி சென்றபின் நின்றது.

நேற்று முன்தினம் இரவு ரவி, கரட்டாங்காடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் 2-வது மாடிக்கு அவர் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

அந்த கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவர் இறந்தாரா? அல்லது வேறு யாராவது கல்லால் அடித்து கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் தெற்கு காவலாளர்கள் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து அதனை விசாரித்து வருகின்றனர்.