டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 29வது நாளாக இன்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் இந்த போராட்டத்துக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்த பிரதமர், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

500க்கு மேற்பட்ட இளைஞர்கள், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினரிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர்.