விருதுநகர்

ஏழை மாணவர்களுக்கு வங்கிகளில்

வங்கிகளில் கல்வி கடன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரசார் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரசு தலைவர் மீனாட்சிசுந்தரம், ஆட்சியரிடம் மனு ஒன்றை நேற்று கொடுத்தார்.

அந்த மனுவில், “விருதுநகர் மாவட்டத்தில் இதற்கு முன்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தபோது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் கிடைக்க உதவி செய்யப்பட்டது.

ஆனால், தற்போது ஏழை தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைப்பதற்கான கல்விக் கடன் கிடைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் கூட பல்வேறு காரணங்களை கூறி தகுதியுள்ள மாணவர்களுக்கும் கல்வி கடன் மறுக்கப்படுகிறது.

இதனால் அந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்போது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் முறையிடலாம் என்றால் முன்னோடி வங்கி மேலாளர் நியமனம் செய்யப்படாத நிலை உள்ளது.

அங்குள்ள பிற அதிகாரிகளிடம் இப்பிரச்சனை குறித்து முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் தங்களுக்கு வங்கி கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கிக்கு மேலாளர் நியமனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் ஏழை மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.