அரசியல் கட்சிகள் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பிறகு அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அதன்படி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
3 மணி நேரத்தில் ரோடு ஷோ முடிக்க வேண்டும்
அதாவது அரசியல் கட்சிகள் வரையறுக்கபட்ட இடத்தில் நிகழ்ச்சி, பொதுக்கூட்டங்கள் நடத்த 10 முதல் 21 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். வரையறுக்கப்படாத வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் 15 முதல் 30 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். 50,000க்கு மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் 3 மணி நேரத்துக்குள் ரோடு ஷோக்களை நடத்தி முடிக்க வேண்டும்.
அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்
கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்காமல் இருபப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு படையினருடன் இணைந்து அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசின் வழிகாடு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.


