காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இளைஞர் ஒருவர் உயிரிழந்தால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறிப்படுகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும்  தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் சில தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் ஆங்கங்கே நிகழ்ந்து வருகிறது.

பாளைங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர் கிடைத்த வேலையை செய்து வருபவர். சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வந்துள்ளார். இவர் செல்வம் தினமும் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி செல்வம் மது போதையில் இருந்தபோது, நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அருகில் இருந்தவருடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் பேசியபடியே வந்துள்ளார்.

இதனையடுத்து பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றுபோது திடீரென செல்வம் 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள்' என்று சத்தம் போட்டு கத்திக் கொண்டே வேகமாக ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு செல்வம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்வம் சிகிச்சைப்பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல நேற்று முன்தினம் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப்யணத்தை நடைபயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுடன் நடைபயணத்தில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த திமுக தொட்டியம் ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து திமுக கொடியை நெஞ்சில் சுமந்தபடி அப்படியே கீழே சாய்ந்தார். அடுத்த சில நொடிகளில் பிரபு பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.