தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 9 நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இதுவரை 630.050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நடப்பாண்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் நவம்பர் 1ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட விவசாயிகள் கேழ்வரகினை மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48,860/- என்ற விலையில் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 31 வரை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்று பயன்பெறலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கேழ்வரகு கொள்முதல் செய்யும் திட்டம், கடந்த 2022-2023 கொள்முதல் பருவத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
2023-2024 கொள்முதல் பருவத்தில் கூடுதலாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்த்து, 4 மாவட்டங்களில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து, கடந்த 2024-2025 கேழ்வரகு கொள்முதல் பருவத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 4050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், நடப்பு 2025-2026 கொள்முதல் பருவத்தில் மெட்ரிக் டன் ஒன்றிற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக ரூ.48,860/- வழங்கப்படுகிறது.இது கடந்த கொள்முதல் பருவ குறைந்த பட்ச ஆதார விலை ரூ.42,900/- ஐ விட மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.5,960/- கூடுதலாகும்.
மேலும், நடப்பு 2025-2026-கேழ்வரகு கொள்முதல் பருவத்தில் 01.11.2025 முதல் 31.01.2026 வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ஒன்றிய அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
தற்சமயம் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 9 நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இதுவரை 630.050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 351 சிறு குறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், நடப்பு 2025-2026 கேழ்வரகு கொள்முதல் பருவத்தில் கேழ்வரகு விவசாயிகள் பயன் பெற ஏதுவாக, கேழ்வரகு கொள்முதல் கால வரம்பு 31/8/2026 வரை நீட்டித்து வழங்க தமிழ்நாடு அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டு. மேற்படி மாவட்டங்களில், நேரடி கேழ்வரகு கொள்முதல் தற்போது, 01.02.2026 முதல் 31.08.2026 வரை கால நீட்டிப்பு செய்து கேழ்வரகு கொள்முதல் செய்ய ஒன்றிய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அரிய வாயிப்பினைப் பயன்படுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த கேழ்வரகினைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் திறக்கப்படும் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம்' என்று கூறப்பட்டுள்ளது.


