- Home
- Tamil Nadu News
- எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலை தானா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசு ஊழியர்களை திட்டமிட்டு ஏமாற்றும் திமுக..
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஒய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தக் குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து ஜனவரி 6ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 3&ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.
ஓய்வூதியம் நடைமுறைக்கு வந்ததாக மாய தோற்றம்
திமுக அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடியானத் திட்டம்; அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று அப்போதே குற்றஞ்சாட்டிய நான், இந்த மோசடித் திட்டமும் கூட திமுக ஆட்சிக்காலத்திற்குள் நடைமுறைக்கு வராது என எச்சரித்திருந்தேன். ஆனால், கடந்த 10ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட திமுக அரசு, 01.01.2026 முதல் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. திமுக அரசு வெளியிட்ட அரசாணையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றியது. அந்த மோசடி இப்போது அம்பலமாகிவிட்டது.
2026&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வேலைநாளான நேற்று 5000&க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர். திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய ஆணைகள் எதுவும் நேற்று ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
யாருக்கும் பயனளிக்காத ஓய்வூதிய திட்டத்திற்கு
ஒருவருக்கும் பயனளிக்காத தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3ஆம் தேதி அறிவித்த போதே, தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அவர்களை இனிப்பு ஊட்டச் செய்து ஏராளமான நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியது. ஒருவேளை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது.
ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும்.
நாடகங்களை நடத்தும் திமுக அரசு
ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை வகுப்பது மிகவும் எளிது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
எனினும், அதற்கான நிதி திமுக அரசிடம் இல்லை என்பதால் அந்த நிதியை ஒதுக்கவும் முடியாது; ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.

