Asianet News TamilAsianet News Tamil

கடனை திருப்பி தர முடியாத நீ எதுக்குஉயிரோட இருக்க? – கூட்டுறவு சங்க ஊழியர்கள் அட்டூழியம்…

You can repay the loan What are you alive rampages cooperative staff
you can-repay-the-loan-what-are-you-alive---rampages-co
Author
First Published Mar 28, 2017, 7:10 AM IST


கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்ற கடனை திருப்பி தர முடியாத நீ எதற்கு உயிரோடு இருக்கிறாய்? என்று கடன் பெற்ற ஏழை, நடுத்தர விவசாய குடும்பங்களை, கூட்டுறவு சங்க ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், தற்கொலைக்கு தூண்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கம் சார்பில் 100–க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

இவர்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, நடுத்தர விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் செய்யும் குடும்பத்தினர் சுமார் 5000 பேர் தமிழக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று வாங்கிய தொகைக்கு மேல் பணம் செலுத்தி உள்ளோம்.

இருப்பினும், அந்த சங்கங்களில் வசூலிக்கப்படும் தவறான வட்டி முறைகளாலும், தொழிலில் ஏற்பட்ட நசிவினாலும், தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குமாரபாளையம், ராசிபுரம், வெண்ணந்தூர், அத்தனூர், குருசாமிபாளையம் பகுதிகளில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்ற நெசவாளர்களின் வீடுகளுக்கு அந்தச் சங்கத்தின் ஊழியர்கள் 10–க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துச் சென்று, தகாத வார்த்தைகளால் திட்டியும், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நீ எதற்கு உயிரோடு இருக்கிறாய் என தற்கொலைக்கு தூண்டியும் அடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

இப்பகுதி நெசவாளர்கள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.3 இலட்சம் வரை கடன் பெற்று வாங்கிய கடனை விட அதிகமாக செலுத்தி இருக்கின்றனர். இருந்தாலும், அவர்களின் பத்திரம் திருப்பி வழங்கப்படாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் வீட்டுவசதி துறை அமைச்சரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர், அதிகாரிகளிடம் பேசி கடனுக்கான வட்டி தள்ளுபடி குறித்து ஆலோசிப்பதாகவும், தமிழகம் முழுவதும் ஏலம், பறிமுதல் நடவடிக்கைகள் எப்போதும் இருக்காது எனவும் கூறினார்.

இந்த சூழ்நிலையில் தற்போது சங்க ஊழியர்களால் மிரட்டுவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

எனவே ஆட்சியர் தலையிட்டு, நெசவாளர்களையும், விவசாயிகளையும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios