Asianet News TamilAsianet News Tamil

2030க்குள் தமிழகத்தில் எச்.ஐ.வி இல்லாத நிலை: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

World aids day Tamil Nadu will be HIV free by 2030 says mk stalin smp
Author
First Published Nov 30, 2023, 4:04 PM IST

எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவாது: “எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2023) உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் “Let Communities Lead” - “சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்“ என்பதாகும்.

எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13.78 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் தொற்றின் தாக்கம் 2003-இல் இருந்த 0.83 சதவீதமானது 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் பால்வினை தொற்று சிகிச்சை மையங்கள், நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் கருதி “தமிழ்நாடு அரசு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை” 2009-10-இல் துவக்கப்பட்டு - இதுவரை 25 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடமிருந்து நிதி பெறப்பட்டு - பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச் சத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாநில அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தியமையால் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.17 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.22 விழுக்காட்டை விடக் குறைவானதாகும். 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, உலக இளைஞர் நாளை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் ‘Red Run’ என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டிகள் 550 கல்லூரிகளில் நடைபெற்றன.

டிச.3ம் தேதி தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்.. எந்தெந்த இடங்களில் மிக கனமழை பெய்யும்?

இதன் தொடர்ச்சியாக, எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதலைக் குறைக்கும் மகத்தான நோக்கத்துடன், சமூக மற்றும் மெய்நிகர் ஊடகத்தின் வாயிலாகவும், இணையதளம், கைபேசி, வானொலி, சுவரோவியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளின் மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030-ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே இலட்சியமாக ஏற்று பயணிப்போம். எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். மேலும், அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios