திருவள்ளூர் 

திருவள்ளூரில் வாகன உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யாததால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஒதப்பை அருகே வாகன உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று பத்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 

இங்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது மூன்று ஆண்டுகள் தொழில் பழகுநர்களாகவும், அதனையடுத்து பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். 

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பல தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.  இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். 

இதில் ஐந்து தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனை அடுத்து, ஐந்து பேருக்கு ஆதரவாக இதர தொழிலாளர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல வேலைக்கு வந்த 54 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.