மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும் போது எதிர்பாராதவிதமாக மண்சரிவில் சிக்கிய தொழிலாளி பொக்லைன் இயந்திரம் கொண்டு மீட்ட போது தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிர்ழந்த விவகாரத்தில் பொக்லைன் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை விளாங்குடி அருகே மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பதிக்கும் பணியானது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மூன்று தொழிலாளர்கள் அதற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்ப்பாராதவிதமாக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் என்பவர், மண் சரிவு ஏற்பட்டு 20 அடி ஆழ பள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
இதனிடையே பள்ளத்தில் விழுந்த நபரை காப்பாற்ற முற்பட்டு, உடன் இருந்த சக பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு வந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயணைப்புத் துறையினர் சதீசின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத்," விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்ததாரர் மீது தவறு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறினார்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும் போது, மண்சரிவில் சிக்கிய உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ACCPL ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடல் புதூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஒரு வாரத்தில் பல்வேறு குற்றங்களில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது... சென்னையில் நடப்பது என்ன?
