சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 01.01.2022 முதல் 03.06.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 33 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 9 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 148 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக முகமது நவுஷாத் அலி, கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதற்காக பாலாஜி, போலியான ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக மோகனசுந்தர், கொலை செய்த குற்றத்திற்காக ஜெயமுருகன், குட்டி (எ) உமா மகேஸ்வரன், ரவி (எ) ரமேஷ், சகாய டென்சி ஆகிய 4 பேர், கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக மாஷுக் மியா, ஜாகிர் உசேன், அனோவர் உசேன் ஆகிய 3 பேர் பேர் என 10 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் செல்வம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முத்துசரவணன் (எ) தலை, மணிகண்டன் (எ) லைவ் மணி, தணிகா (எ) தணிகாசலம், கௌதமன், சதீஷ்குமார் ஆகிய 5 பேர், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் சமர்பித்து கடன் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக ஶ்ரீதர் ஆகிய 6 பேர் உள்ளிட்ட மொத்தம் 16 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
