worker Kill and damaged his face with stone horror

திருப்பூர்

திருப்பூரில் கல்லால் அடித்து கொன்றுவிட்டு தொழிலாளியின் முகத்தை சிதைத்த கொடூர கொலைகாரர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி, வித்யாலயமாத்தாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (48) பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (35). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரை குழந்தை இல்லை.

எனவே, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரியா, கோயம்புத்தூரில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த சரவணன் தானே சமைத்து சாப்பிட்டு வந்தார். 

திருப்பூரில் அவர் தனியாக தங்கி இருந்தாலும், நாள்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கு செல்போனில் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்படி கடந்த 8–ஆம் தேதி இரவு 9 மணிக்கு அவர், தனது மனைவியிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். 

அதன் பின்னர் மறுநாள் காலையில் பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம். ஆனால், அவர் கூறியபடி மறுநாள் காலை 9 மணிக்கு செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கணவரிடம் இருந்து அழைப்பு வராமல் ஜெயப்பிரியா ஏமாற்றம் அடைந்தார். 

அதனால் அவர் தன்னுடைய செல்போனில் இருந்து சரவணனுக்கு அழைத்தார். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்தது. தொடர்ந்து முயற்சி செய்தும் செல்போன் ஆன் செய்யப்படவில்லை. 

இதையடுத்து சரவணனின் தம்பி முருகராஜராகவனை (44) செல்போனில் தொடர்பு கொண்ட ஜெயப்பிரியா, சரவணனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ய்ப்பட்டுள்ளது என்றும் உடனே நேரில் சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார். ஆனால, அவர் வெளியில் இருந்ததால் உடனடியாக அங்கு போக முடியவில்லை. 

இதற்கிடையில் சரவணன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீரபாண்டி காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சரவணனின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. 

இதனையடுத்து கதவை உடைத்து காவலாளர்கள் உள்ளே சென்றனர். அங்கு குளியலறையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சரவணனை 'ஹாலோ பிளாக்' என்னும் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே கல்லால் அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து, முகத்தின் மீது ஹாலோ பிளாக் கல்லை வைத்துவிட்டு பின் வாசல் வழியாக தப்பி சென்றுள்ளனர். 

இதனையடுத்து அவருடைய உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் கொலை செய்யப்பட்ட தகவல் அவருடைய மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். 

இதனிடையே சரவணன் குடியிருந்த வீட்டையொட்டி உள்ள வீட்டில் குடியிருந்த ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இந்த கொலைக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று வீரபாண்டி காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.