விழுப்புரம் 

கடன் பெற்ற பணத்தை திருப்பி கேட்டபோது காசோலை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் நீதி கேட்டு விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கே.கே. சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன் மனைவி கலையரசி (50). இவர் நேற்று காலை விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த அவர் திடீரென தன்னிடம் இருந்த கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்ற முயன்றார். 

இதைப் பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் விரைந்துச் சென்று கலையரசியை தடுத்து நிறுத்தி அவர் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். 

பின்னர் அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "கடந்த 2013-ஆம் ஆண்டு சாலாமேட்டை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தான் வீடு கட்டுவதாகவும், ரூ.10 இலட்சம் கடன் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். 

அந்தச் சமயத்தில் எனக்கு என்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து பாகப்பிரிவினை செய்யப்பட்டதன் மூலம் சொத்து கிடைத்தது. அதன்மூலம் அந்த நபர் கேட்ட ரூ.10 இலட்சத்தை நான் கடனாக கொடுத்தேன். ஆனால், பல மாதங்களாகியும் அவர் அந்த கடனை எனக்கு திருப்பித்தரவில்லை. 

இதுதொடர்பாக அவரிடம் சென்று கேட்டபோது எனக்கு ஒரு காசோலை கொடுத்தார். அவர் கொடுத்த காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றபோது அவரது கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. 

இதுகுறித்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதி கேட்டு தற்கொலைக்கு முயன்றேன்" என்று அவர் கூறினார். இதனையடுத்து கலையரசியை காவலாளர்கள் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.