- Home
- Tamil Nadu News
- கொட்டும் பனியில் கஷ்டப்படாதீங்க.. தூக்கத்தை விரட்ட டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் டோல்கேட்
கொட்டும் பனியில் கஷ்டப்படாதீங்க.. தூக்கத்தை விரட்ட டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் டோல்கேட்
குறிப்பிட்ட இந்த டோல்கேட் நிர்வாகம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக இலவச டீ வழங்கி வருகிறது. அதிகாலை நேரத்தில் சோர்வு மற்றும் கவனச்சிதறலால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இலவச டீ சேவை
வட தமிழக பகுதிகளில் சமீப நாட்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் நிர்வாகம் ஒரு முன்மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பனிப்பொழிவு காரணமாக ஏற்படும் சோர்வு மற்றும் கவனச்சிதறல் விபத்து காரணமாக, அதைத் தடுக்கும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் இலவச டீ வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக பல இடங்களில் பார்வைத் தூரம் குறைந்து, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
பள்ளிகொண்டா டோல்கேட்
இந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வு காரணமாக ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும், பள்ளிகொண்டா டோல்கேட் நிர்வாகம் இலவச டீ வழங்கத் தொடங்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகை வாகன ஓட்டுநர்களுக்கு இந்த டீ வழங்கப்படுகிறது. சென்னை–பெங்களூர் மற்றும் பெங்களூர்–சென்னை என இரு மார்க்கங்களிலும் செல்லும் வாகனங்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.
மேலும், டோல்கேட் அருகே ஒலிபெருக்கி மூலம் டிரைவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை இந்த டீ வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பனிப்பொழிவு காலம் நீடிக்கும் வரை இந்த சேவை தொடரும் என்றும் டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முன்னிறுத்திய இந்த நடவடிக்கை, பள்ளிகொண்டா டோல்கேட்டில் பயணம் செய்யும் டிரைவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

