Women struggle with empty pots Men stood around like armor
ராசிபுரம்
குடிநீர் பிரச்சனையை போக்க ஆழ்துளை கிணறை விரைந்து அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு அரணாக சுற்றி நின்று ஆண்கள் பாதுகாப்பு வழங்கினர்.
நாமகிரிபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது கார்கூடல்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பிலிப்பாகுட்டை பகுதிகளுக்கு கடந்த 20 நாள்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை.
அதையொட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் அவர்களை சந்தித்து உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
அந்த சூழ்நிலையில் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் பிலிப்பாகுட்டை பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க இடத்தை தேர்வு (பாயிண்ட்) செய்தனர். ஆனால் அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தாமதிக்கின்றனர்.
எனவே, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிலிப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் இல்லையென்றால் போராட்டத்தை தொடர்வோம் என்றும் பெண்கள் தெரிவித்தனர்.
பின்னர், முற்றுகை போராட்டம் நடத்தியவர்களுடன் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சிவப்பிரகாசம், பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆயில்பட்டி உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
மீண்டும் அந்த அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை நம்பி, முற்றுகை போராட்டம் நடத்திய பெண்களும், அவர்களுக்கு பாதுகாப்பாய் இருந்த ஆண்களும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
