Asianet News TamilAsianet News Tamil

சாராயக் கடையை நிரந்தரமாக மூட கோரி பெண்கள் கோரிக்கை மனு; செவிசாய்ப்பாரா ஆட்சியர்?

Women request for permanent closure of Alcohol Store to the collector
Women request for permanent closure of Alcohol Store to the collector...
Author
First Published Feb 13, 2018, 8:13 AM IST


விழுப்புரம்

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைப்பெற்றது, இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சுப்பிரமணியனிடம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டை அடுத்த பொருவளூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "பொருவளூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியின் மத்தியில் இந்த சாராயக் கடை அமைந்துள்ளதால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

ஏனெனில், இந்த கடைக்கு சாராயம் குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி பள்ளி - கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் கடைவீதிகளுக்கு செல்லக்கூடிய பெண்களும் இந்த டாஸ்மாக் சாராயக் கடையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது குடிவெறியர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்கோரி கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு கடையை திறக்கவில்லை.

இந்த நிலையில் இந்த டாஸ்மாக் சாராயக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இங்கு டாஸ்மாக் சாராயக் கடை திறந்தால் எங்கள் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற ஆட்சியர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios