Asianet News TamilAsianet News Tamil

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெண் இறப்பு…

women dead for gave anesthetic for family control at the government hospital ...
women dead for gave anesthetic for family control at the government hospital ...
Author
First Published Jun 17, 2017, 9:29 AM IST


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில், அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டுக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். சமீபத்தில் தான், அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாடுவானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன். இவரது மனைவி சாவித்திரி (32).

இவர்களுக்கு ஏற்கனவே 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சாவித்திரிக்கு சில நாள்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தைப் பிறந்தது.

அதனால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள சாவித்திரி வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து கொடுக்கப்பட்டவுடன் சாவித்திரியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாம்.

இதனையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் சாவித்திரி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாவித்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று நாடுவானப்பள்ளி கிராமத்தில் அவருடைய சடலத்தை சாலையின் நடுவே வைத்து, ‘‘சாவித்திரி, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் உயிரிழந்தார். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ எனக்கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாசில்தார் மோகனசுந்தரம் மற்றும் வேப்பனப்பள்ளி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாவித்திரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையேற்ற சாவித்திரியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios