வேலூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அமைச்சர் துரைமுருகனை முள்ளிப்பாளையம் மக்கள் முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் உடனடி தீர்வு காண கேட்டுக்கொண்டார்.
Women besiege Minister Durai Murugan : தமிழக அமைச்சரவைகளில் மூத்தவராக இருப்பவர் துரைமுருகன், வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெறும் தமிழக அரசின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் வேலூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென பார்வையிட வந்தார். அப்போது மக்கள் அளித்துள்ள விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள்
அப்போது, அரசின் திட்டங்களை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் காத்திருந்தனர். அப்போது முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் ஆனால் உரிய வகையில் சாலை மற்றும் கழிவு நீர் செல்ல வசதிகள் இல்லையென கூறி ஆவேசமாக பேசினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கோரினர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உடனடியாக தீர்வு காண உத்தரவிட்ட துரைமுருகன்
இதனையடுத்து இன்றைய தினம் காலை அப்பகுதிக்கு வந்து உரிய தீர்வு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முன்னதாக பொதுமக்கள் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட போது அமைதியாக கேட்டறிந்தவர் கன்னத்தில் கை வைத்தும், யோசனை செய்வது போன்றும் நடிகர் சிவாஜி போல் முகபாவனை செய்தார்.


