சென்னை திருவொற்றியூரில் குக்கர் வெடித்து பெண் பலியான சம்பவமும், கிளாம்பாக்கத்தில் பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவமும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.

சென்னை திருவொற்றியூர் சரவணன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(62). இவரது மனைவி ராஜலட்சுமி (55) இவர்களுக்கு யுவ்ராஜ் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு பழுதான ஏசியை சரிசெய்ய யுவராஜ் நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நண்பருக்கு மதிய சாப்பாடு தயார் செய்யும்படி தாய் ராஜலட்சுமியிடம் மகன் கூறியுள்ளார். இதனையடுத்து ராஜலட்சுமி குக்கரில் சாப்பாடு வைத்துள்ளார்.

குக்கர் வெடித்து விபத்து

குக்கரில் நீண்ட நேரமாகியும் விசில் வராததால் சந்தேகமடைந்து பக்கத்தில் சென்ற போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், குக்கரின் மூடி ராஜலட்சுமியின் முகத்தில் பட்டு பின்புறமாக விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகன் யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ராஜலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநருக்கு மாரடைப்பு

இந்நிலையில் சென்னையில் மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு நோக்கி சென்னை மாநகர பேருந்து தடம் எண் 70C பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது.

4 கார்கள் சேதம், ஒருவர் பலி

இந்த விபத்தில் 4 கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில் அங்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாரடைப்பு ஏற்பட்ட ஒட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.