Asianet News TamilAsianet News Tamil

காட்டு யானை தாக்கி இளைஞர் பலி; வனத்துறையினரின் அலட்சியமே காரணமாம் - பொங்கி எழுந்த மக்கள் போராட்டம்...

Wild elephant attacked and killed youth ignorance of forest department is reason people struggle ...
Wild elephant attacked and killed youth ignorance of forest department is reason people struggle ...
Author
First Published May 4, 2018, 8:04 AM IST


நீலகிரி

காட்டு யானை  தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை  தொடர்ந்து கிராம மக்கள் மறியலில் வனத்துறையினரைன் அலட்சியமே இறப்புக்கு காரணம் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் பலியானதைக் கண்டித்தும், காட்டு யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கக் கோரியும் கூடலூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே உள்ள கர்க்கப்பாலி வட்டக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் ரமேஷ் (29). 

இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் ஜெயபிரகாஷ் (32), சிவபிரகாஷ் (25) ஆகியோருடன் அதே பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை துரத்தி சென்று மூவரையும் தாக்கியது. இதில் ஜெய பிரகாஷ், சிவபிரகாஷ் பலத்த காயங்களுடன் காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பினர். 

ஆனால், ரமேஷ் காட்டு யானையின் பலத்த தாக்குதலுக்கு ஆளானதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தேவர்சோலை காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

காட்டு யானையின் தாக்குதலுக்கு ஆளான ஜெயபிரகாஷ், சிவபிரகாஷ் ஆகியோர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

யானை தாக்கி இளைஞர் பலியான சம்பவம் காட்டுத்தீயாய் அப்பகுதி மக்களிடையே பரவி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பொங்கி எழுந்த கர்க்கப்பாலி பகுதி கிராம மக்கள் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். 

அகழி அல்லது மின்வேலி அமைத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி நேற்று காலை 9 மணிக்கு கூடலூர் - கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள பாடந்தொரையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிசங்கர், ஆய்வாளர்கள் வெங்கடாசலம், சிவசங்கரன் உள்ளிட்ட காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, "மாவட்ட ஆட்சியர், வன அலுவலர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். காட்டு யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும். அதன்பின்னரே மறியல் கைவிடப்படும்" என்று மக்கள் தெரிவித்தனர். 

அதன்பின்னர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்போதும் முடிவு ஏற்படவில்லை. 

பின்னர், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் தி.மு.க. நிர்வாகி பாண்டியராஜ், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சகாதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வாசு, தே.மு.தி.க.வை சேர்ந்த திருப்தி மணி உள்பட அரசியல் கட்சியினர் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "காட்டு யானைகளால் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன என பலமுறை வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதனை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கி பலியாகிவிட்டார். வனத்துறையினர் அலட்சியத்தால் உயிர்களை இழக்க வேண்டிய நிலை உள்ளது" என்று கிராம மக்கள் வனத்துறையினர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. திராவிடமணி செல்போனில் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, "காட்டு யானைகளை விரட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அகழி வெட்டவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

இதனையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பாடந்தொரை பகுதியில் காவலாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios