Wide spread rain fall in Kanyakumari - recorded at 27.4 mm high in Pichiparai
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பெய்த பரவலாக மழையால் பேச்சிப்பாறை பகுதியில் அதிக பட்சமாக 27.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்தது. இதில் அதிக பட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால், தற்போது வினாடிக்கு 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதேபோல மாவட்டத்தின் மற்றொரு முக்கிய அணையான பெருஞ்சாணி அணைக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 653 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.மேலும், குமரியின் குற்றாலம் என்று வர்ணிக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டியது.
மாவட்டத்தின் மற்றப் பகுதிகளில் பெய்த மழை அளவு இதோ:
நாகர்கோவில் – 10 மில்லி மீட்டர், கோழிப்போர்விளை – 18.2 மில்லி மீட்டர், ஆரல்வாய்மொழி – 9.5 மில்லி மீட்டர், பாலமோர் – 8 மில்லி மீட்டர், முள்ளங்கினாவிளை – 9 மில்லி மீட்டர்,
புத்தன்அனை – 8.4 மில்லி மீட்டர், அணைப் பகுதிகளில் பெருஞ்சாணி – 8 மில்லி மீட்டர், சிற்றார் 1 – 8 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்திருந்தது.
