1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பதை பார்க்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்த ஒன்று ஆகும். இதை எப்போது செயல்படுத்தப் போகிறார்கள் என்று 2021 மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
திமுக ஆட்சி ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் கேள்விக்கான பதில் கிடைத்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது சர்ப்ரைஸ் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பிறகு 2023 - 24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இடம்பெற்றது. அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சுமார் ஒரு கோடி மகளிர் இதன் பலனை அனுபவிப்பர் என்று கூறப்பட்டது. அதேசமயம் தகுதி வாய்ந்த மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும், ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?