Who takes the thirsty water? Two sides in the same village
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் யார் எடுப்பது? என்று ஒரே கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த காவல்துறை, மோதல் ஏற்படும் முன்னே பேசி சுமூகமான தீர்வை ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே ஈச்சங்காடு என்ற கிராமம் உள்ளது. ஈச்சங்காடு கிராமத்தில் சுமார் 100 வீடுகளும், ஈச்சங்காடு காலனியில் 20 வீடுகளும் என மொத்தம் 120 வீடுகள் உள்ளன.
இந்த காலனியில் இதற்குமுன் செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி போனது. தற்போது அதன் அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிணற்றின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீரேற்றி ஈச்சங்காடு கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பழைய ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி போனதால் ஈச்சங்காடு காலனியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து காலனியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஈச்சங்காடு காலனி மக்களுக்கு மாற்று ஏற்பாடு இருப்பதாக கூறி புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய ஊர் முக்கிய பிரமுகர்கள் மறுத்து விட்டனர்.
மேலும், மர்ம நபர்கள் சிலர் காலனி பகுதியில் இருந்த வாழை மரங்களை வெட்டி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுத்த நினைத்துள்ளனர்.
இதனையடுத்து ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சுனன், மத்தூர் காவல் ஆய்வாளர் ராமாண்டவர், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாபேகம் ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து ஈச்சங்காடு காலனிக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து காவல் பாதுகாப்புடன் அந்தப் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
